Saturday, 16 February 2013

ஜோதிடம் , ஜாதகம் விளக்கக்கட்டுரை (பகுதி-5)

இதுவரை......
          ஜோதிடத்தைப் பொருத்தவரை நமக்கான விதிப்பயனை அறிந்து நடப்பவர்களுக்கே முழுப்பயன் கிடைக்கும். யோகம் சரியாக அமையாவிடில் , திறமையும் பயன்படாமல் போக வாய்ப்புள்ளது! திறமை பயன்படாது போனதற்கு, கற்பனைக் கதைகளைச் சொல்லலாம். ஆனால், யோகத்துடனான திறமை, பலன் அளித்ததை சரித்திரத்திலிருந்து கோடிட்டு காட்டுதல் அவசியமே. வேண்டாம் என்று ஒதுக்கிய பின்பும் யோகம் அனுபவித்த கதையை இப்போது பார்ப்போம்.
          கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வஞ்சி நாட்டை ஆண்ட மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் . அவரது மகன்கள் மூத்தவர் செங்குட்டுவன். இளையவர் இளங்கோவன். இவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பலனரிய அரசர் ஜோதிடரை அழைத்தார். ஜோதிடரும் இருவரின் ஜாதகத்தையும் நன்றாக ஆராய்ந்தார். 
             மூத்தவர் செங்குட்டுவனின் ஜாதகம் சிறப்பாக இருந்தது. சிறந்த ஆட்சி புரிவார். நல்ல புகழ் பெறுவார் என்றும் தெளிவாக இருந்ததினால் , நல்ல மன்னராகத் திகழ்வார் என்று ஜோதிடர் கூறிவிட்டார். பிறகு இளங்கோவன் ஜாதகத்தில் அண்ணனைவிட மிகுந்த திறமையும், புகழும் பெற்று, தரணி போற்றும் மனிதனாக விளங்குவார் என்று தெரிந்தது. எனவே, மூத்தவரைவிட இளையவருக்குத்தான் அரசாளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக்கூறினார். மூத்தவர் இருக்க இளையவர் நாடாள்வது தவறு என இளங்கோவன் மறுத்துப் பேசினார்.
            ஜோதிடர் பலன் சொல்லும்போது, ஜாதகரின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப ஜோதிடம் சொல்வதே வழக்கம். ஆனாலும். வேறு பலன்களும் உள்ளனவா, என ஆராய்வதும் அவசியம். ராஜபரம்பரை என்பதால், இளையவர் அரசாள்வதற்கு வாப்புள்ளபடியால், ஜோதிடர் அவ்வாறு கணித்துக் கூறினார்.
            இளங்கோவனுக்கு இதில் சிறிதும் உடன்பாடில்லை. எனவே ஜோதிடனிடம் உன் கூற்றை பொய்யாக்கிக் காட்டுகின்றேன் என்று துறவறம் மேற்கொண்டார். இதனால், அண்ணன் நாட்டை ஆளவும், தான் அரியணை ஏறாமல் தடுக்கவும் செய்தார்.
             ஜோதிடர் கணித்தது தவறில்லை. எந்தத் துறை எவரைப் பிரகாசிக்கச் செய்யும் என கணித்ததில்தான் தவறு. அவருக்கு இலக்கியத்தில் உலகப் புகழ்ழடைவாரென கணித்திருந்தால், அரசாள்வது பற்றி கூறியிருக்க மாட்டார். இதுவும் அவரின் யோகத்தால் கடவுள் செய்த திருவிளையாடலாக இருந்திருக்கலாம்! ஜோதிடர் அரசாள்வார் என்று கூறியதால்தான், இவர் துறவறம் மேற்கொண்டு இலக்கியத்துறைக்கு தன்னை அற்பணித்துக் கொண்டார். அதனால் தன் அண்ணனை விட உலகம் முழுதும் புகழ் பெறும் வாய்ப்பைப் பெற்றார். புவி அரசன் என்றில்லாமல், உலகம் போற்றும் கவி அரசரானார். அண்ணனின் ஜாதகம் சிறந்த அரசாள்வார் என்றபடி தன் சொந்த நாட்டை சிறப்புடன் ஆண்டு அவர்  நாட்டில் சிறந்த பெயர் பெற்றார்.
           இளங்கோவடிகள் என பிற்காலத்தில் புகழுடன், நமக்கு சிலப்பதிகாரம் வழங்கிய அவர், தமக்கு யோகம் வேண்டாம் என்று துறவரம் சென்றவர். அவரின் ஜாதகம் வாழ்க்கை சிறப்பாக அமைய  சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொடுத்தது. கடவுள் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார் என்றால், வீட்டு வாசலில் பண மூட்டையைக் கொண்டுவந்து வைப்பார் என்று பொருளல்ல. சூழ்நிலைகளை உருவாக்கித் தருவார் என்பதே பொருள். எந்த விதமான வாழ்க்கை முறையை நமக்கு அளித்துள்ளார் என அறிவதே சிறந்தது.
                    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
                    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது - வள்ளுவன்
           நமக்கென்று கடவுள் வகுத்த சரியான வாழ்க்கையை அறிந்து அதனைப் பின்பற்றி வாழாமல், நாமாக ஒன்றை உருவாக்கிக்கொள்வது துயரத்தில் கொண்டு சேர்க்கும்.ஜோதிடத்தில் இதுபோலவே ஒவ்வொரு பாவங்களும் வரையறுக்கப்பட்டுள்ளது. மற்ற பாவங்களைப் பற்றி அடுத்த இதழில் பாப்போம்.
பஞ்சாங்க கைப்பிரதி ஆசிரியர், ஜோதிட ஆலோசகர், எம்.எஸ்.கோபால்
62. குன்றத்தூர் ரோடு, மௌலிவக்கம், போரூர், சென்னை-600125.

No comments:

Post a Comment